கடந்த சில வாரங்களாக மலேசியாவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் மலேஷியா அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் உரிய ஆவணம் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த மக்கள் அடங்குவர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது புக்கிட் ஜலில் மற்றும் செமெனியி தடுப்புக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் புக்கிட் ஜலில் மையத்தில் இருந்த இந்திய பிரஜை ஒருவர் கோவிட் 19 தொற்றால் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவருடைய இறப்பிற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், தற்போது ஆய்வக அமுடிவுகளுக்காக காத்திருக்குறோம் என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அவர்கள் கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த நபர் சென்னையை சேர்ந்தவர் என்றும், அவருடைய குடும்பத்திரனாருக்கு கடந்த 14ம் தேதியே அவருடைய மரண செய்தியை தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஆய்வக முடிவுகள் வெளிவந்த பிறகே அவர் இறப்புக்குறித்து தெரிவிக்க முடியும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.