‘மலேசியாவில் மீண்டும் தொடங்கும் பயணிகள் விமான சேவை’ – ஏர் ஏசியா வெளியிட்ட அறிக்கை

Air Asia Malaysia

மலேசியாவில் கொரோனா காரணமாக வரும் ஏப்ரல் 28ம் தேதி வரை பொது நடமாட்டக் கட்டுப்பட்டு அமலில் இருக்கும் என்று மலேசிய பிரதமர் கடந்த ஏப்ரல் 10ம் தேதி அறிவித்தார். இந்த தடை காலத்தில் பயணிகள் விமான சேவையும் முற்றிலும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 29ம் தேதி முதல் மலேசியாவில் பயணிகள் விமான சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஏர் ஏசியா நிறுவனம்.

இதை தொடர்ந்த மே 1ம் தேதி முதல் தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ்சிலும், மே 4ம் தேதி இந்தியாவிலும், மற்றும் மே 7ம் தேதி முதல் இந்தோனேசியா உள்ளிட்ட இடங்களிலும் துறைசார்ந்த அதிகாரிகளின் ஒப்புதலுக்கு உட்பட்டு இந்த சேவை தொடங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பயணிகள் விமான சேவை தொடங்கும் பட்சத்தில், முதலில் உள்நாட்ட சேவைகளை தொடங்கி முக்கியமான வழித்தடங்களில் சேவை இருக்கும் என்றும். படிப்படியாக நிலைமைக்கு ஏற்றார் போல பன்னாட்டு சேவைகளும் தொடங்க வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விமானங்கள் ஏற்கனவே அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடு வழியாக முன்பதிவு செய்ய திறக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.