கொரோனா காரணமாக மலேசியாவில் சிகிச்சை பெற்று வந்த ஐரோப்பிய குடிமக்கள் பலர் தங்களுக்கு சிகிச்சை அளித்து அரவணைத்த மலேசிய அரசுக்கு நன்றி தெரிவித்து வருவதாக மலேசியாவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரும் தலைவருமான மரியா காஸ்டிலோ பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
“எங்களுக்கு மலேசியாவில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று பலரும் கூறுவதாக”, அவர் தற்போது தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பெர்னாண்டஸ், மலேசியாவின் சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் இங்குள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார அமைச்சகம் மற்றும் தூதரகங்களுக்கு சரியான நேரத்தில் தகவல்களை அளித்து அவர்களுடன் தொடர்பைப் பேணியதையும் அவர் பாராட்டினார்.
மலேசிய மருத்துவமனைகளில் தற்போது எந்த ஐரோப்பியர்களும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரவில்லை என்றபோதும், கடந்த சில வாரங்களில் சில ஐரோப்பிய நாட்டவர்கள் மலேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர் என்றும் அதில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.