‘குறைந்து வரும் கொரோனா’ – தாயகம் திரும்பிய 200-க்கும் அதிகமான மலேசியர்கள்

malaysians

கொரோனா பரவல் காரணமாக உலகின் பல நாடுகளில் மலேசியர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் பெருவின் லிமாவில் உள்ள மலேசிய தூதரகம், பெரு மற்றும் பொலிவியாவில் சிக்கித் தவித்த 26 மலேசியர்களை நேற்று தாயகம் திருப்பி அனுப்பியுள்ளது. இந்த தகவலை விஸ்மா புத்ரா தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மலேசியர்கள் அனைவரும் லிமாவில் உள்ள மலேசிய தூதரகத்தால் சிறப்பு அமஸ்ஸோனாஸ் விமானத்தில் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்விற்கு உதவிய அணைத்து அதிகாரிகள் அனைவருக்கும் மலேசிய அரசு நன்றி தெரிவித்துள்ளது.

இதே போல நேற்று இலங்கையில் இருந்து 82 பேரும், இந்தியாவின் சென்னையில் இருந்து 97 பேரும் அடங்கிய 179 மலேசியர்களை மலிண்டோ ஏர் விமானம் மூலம் தாயகம் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தாயகம் திரும்பியுள்ள மலேசியர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவிற்கு எதிரான இந்த போராட்டத்தில் மலேசியா சிறந்த முறையில் போராடி வருவதாக மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.