‘மலேசிய மக்கள் இந்த பசுமையான வாழ்க்கை முறையை தொடர வேண்டும்’ – இப்ராஹிம் மான்

Tuan Ibrahim Tuan Man

ஆயிரக்கணக்கில் கொத்து கொத்தாக சாகும் மக்கள், உலகம் முழுதும் லட்சக்கணக்கானோர் பாதிப்பு. தற்கால உலக பார்த்திராத ஒரு இக்கட்டான சூழலால். சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல், சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் பரிதவித்து வருகின்றனர் மக்கள். சீனாவில் தோன்றிய அந்த ஒற்றை தொற்று தற்போது உலக முழுவதும் 25 லட்சத்திற்கும் அதிகமான தொற்றாக உருவெடுத்துள்ளது.

ஆனால் இது ஒருபுறம் இருக்க, உலக முழுக்க நிலவும் ஊரடங்கு காரணமாக மனிதன் நொடிந்து போனாலும் இயற்கை பலமடங்கு வளம்பெற்றிருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். பல நாடுகளில் நதிகள் தூய்மை பெற்றுள்ளன. டால்பின் மீன்கள் கடற்கரையில் தென்படுகின்றன. தற்போது இது குறித்து மலேசியா சுற்றுசூழல் அமைச்சர் இப்ராஹிம் மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஊரடங்கால் மலேசியா மட்டும் இன்றி உலகம் முழுதும் இயற்கை பெருமளவில் மீண்டு வருவதை நம்மால் காணமுடிகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனால் மலேசிய மக்கள் பொது நடமாட்டக் கட்டுப்பாடு முடிவடைந்த பிறகும் பசுமையான வாழ்கை முறையை பயன்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பசுமையான வாழ்வு முறையால் தற்போது உள்ள சுகாதாரமான சூழல் நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா முற்றிலும் அழிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிறகும் மக்கள் வீடுகளில் மின்சாரத்தை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகள் போன்ற பல விஷயங்களை தொடர்ந்து செய்வதன் மூலம் நம்மால் இந்த பசுமையான வாழ்வை தொடர்ந்து நடத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.