கொரோனா : வெளிநாட்டில் வாழும் மலேசியர்கள் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும் – வெளியுறவு அமைச்சர்

Hishamuddin_Tun_Hussein

வெளிநாடுகளில் தற்போது வசித்துவரும் மலேசியர்கள் சம்பந்தப்பட்ட கொரோனா நோய்த்தொற்று வழக்குகளை கண்காணிக்க ஒரு சிறப்பு பணிக்குழு உருவாக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் டத்துக் செரி ஹிஷாமுதீன் ஹுசைன் இன்று அறிவித்துள்ளார்.

மலேசியா அன்றி பிற நாடுகளின் வசித்து வரும் மலேசியர்கள் சுமார் பதினொரு பேருக்கு இந்த கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹிஷாமுதீன் கூறியுள்ளார் என்று மலேஷியா மெயில் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கொரோனா நோயால் சிங்கப்பூரில் இதுவரை ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் ஏழு பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தானும் வெளியுறவு அமைச்சகத்தின் (விஸ்மா புத்ரா) மலேசியாவின் வெளிநாட்டு பிரதிநிதிகளும் கொரோனா தொற்று குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று அமைச்சர் கூறினார்.