தேசிய மிருகக்காட்சிசாலை – ‘எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் சிங்கம்..!!’ – விளக்கம் அளித்த துணைத் தலைவர்

Lion in Zoo

மலேசியாவின் சிலாங்கூர் பகுதியில் 1963ம் ஆண்டு சுமார் 110 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டது தான் தேசிய மிருகக்காட்சிசாலை. ஏறத்தாழ சுமார் 50 ஆண்டுகளும் மேலாக இயங்கி வரும் இந்த மிருகக்காட்சி சாலை தற்போது வரலாறு காணாத அளவில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. மலேசிய முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே இந்த கொரோனாவால் முடங்கிப்போய் உள்ள நிலையில் மலேசியாவில் உள்ள இந்த மிருகக்காட்சி சாலையும் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இந்த தேசிய மிருகக்காட்சிசாலையில் உள்ள சிங்கம் ஒன்று எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்குள்ள மிருகங்களுக்கு சரியான உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதை முற்றிலும் மறுத்துள்ளார் அந்த தேசிய மிருகக்காட்சிசாலையின் துணைத் தலைவர் ரஹ்மத் அகமட் லானா.

பரவி வரும் கோவிட் தொற்று காரணமாக குறித்த உணவுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இறைச்சிக்கு பதிலாக கோழியின் இறைச்சியை சிங்கங்களுக்கு அளித்து வருகின்றோம். ஆனால் 15 வயதுள்ள அந்த ஆண் சிங்கத்திற்கு அந்த உணவு பிடிக்கவில்லை என்றும் ஆதலால் அது உணவு உட்கொள்ள மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.