இந்தியா வரும் மலேசியர்களுக்கும் கொரோனா சோதனை நடத்த வேண்டும் : இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்

civil aviation

நேபாளம், இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் மலேசியாவிலிருந்து வரும் பயணிகளும் இந்திய விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டும் என்று இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது. பரவி வரும் கொரோனா பயத்தால் பல நாடுகளின் பல தடைகளை விதித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை மிக குறைவான அளவில் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் தங்கள் நாட்டிற்குள் வருபவர்களை தீவிர கண்காணிப்பிற்கு பிறகே நாட்டிற்குள் அனுமதித்து வருகின்றது இந்தியா.

இந்நிலையில், சீனா, ஹாங்காங், தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஆறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நோய் தொற்று இருப்பதாக சந்தேகபடப்படும் பயணிகள் 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவி வரும் இந்த கொரோனா நோய் தொற்று காரணமாக இதுவரை சீனாவில் சுமார் 2000கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70,000க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.