கொரோனா நோய் தொற்று – மலேசியாவில் 18 பேர் பாதிப்பு

NOOR HISHAM ABDULLAH

கடந்த ஆண்டு இறுதியில் இருந்து வுஹான் வைரஸ் என்று அழைக்கப்படும், கொரோனா நோய் தொற்று சீனாவில் பரவி வருகிறது. ஹுபெய் மாகாணத்தின் தலைநகர் வுஹான் என்ற நகரத்தில் இருக்கும் ஒரு சந்தையில் இருந்து இந்த நோய் தொற்று பரவியதாக கூறப்படுகிறது. அபாயகரமாக சீனாவில் சுமார் 900 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். மேலும் இந்த நோய் சீனாவை தவிர மலேசியா, இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட இருபது நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘ப்ரீ மலேசியா டுடே’ என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ள தகவலின்படி,  ஏற்கனவே மலேசியாவில் 17 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 1ம் தேதி சீனாவில் இருந்து தாயகம் திரும்பிய 31 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து பேசிய மலேசியாவின் சுகாதார இயக்குனர், ஜெனரல் டாக்டர். நூர் ஹிசாம் அப்துல்லா, கடந்த 1ம் தேதி சீனாவில் இருந்து திரும்பிய அந்த நபருக்கு கடந்த பிப்ரவரி 3ம் தேதி முதல் கடுமையான இருமல் ஏற்பட்டதை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும். அங்கு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டு அவருக்கு வுஹான் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.