கோலாலம்பூர் மெனாரா சிட்டி ஒன் – விதிக்கப்பட்ட EMCO கட்டுப்பாடு

merana city one

பரவி வரும் கொரோனா அச்சத்தால் வருகின்ற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை பொது நடமாட்டக் கட்டுப்பாடு மலேசியாவில் அமலில் உள்ளது. இந்த தடை தேவைப்பட்டால் மேலும் கடுமையாக்கப்படும் என்று ஏற்கனவே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோலாலம்பூரில் உள்ள மெனாரா சிட்டி ஒன் என்ற இடத்திற்கு அடுத்த கட்ட தடையான EMCO விதிக்கப்பட்டுள்ளது.

Enhanced movement control order எனப்படும் இந்த EMCO மூன்றாம் கட்ட பொது நடமாட்டக் கட்டுப்பாடாகும். இதனையடுத்து இந்த தடை அந்த இடத்தில் இருக்கும் 502 குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 3,200 குடியிருப்பாளர்களுக்கும் அதே போல அங்கு இருக்கும் 49 கடைகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பிறகே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த பகுதியில் வசிப்பவர்கள் இணையதள உதவியை கொண்டு உணவு ஆர்டர் செய்யலாம் என்றும் அந்த உணவும் தகுந்த பாதுகாப்புடன் ஒரு திறந்த வெளியில் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 13ம் தேதி நள்ளிரவு வரை இந்த தடை அமலில் இருக்கும்.