கடும் குழப்பத்தில் மலேசிய அரசியல் – நெருக்கடியில் பிரதமர் மகாதீர்

mahathir

நஜீப் ரசாக் மலேசியாவின் முன்னாள் பிரதமர், தற்போதைய மலேசியாவின் பிரதமர் மகாதீர் மற்றும் அன்வார் இப்ராஹிம் வருங்கால மலேசிய பிரதமராக கருதப்படுபவர். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த மூவரை சுற்றியே சுழலுகிறது மலேசியாவின் அரசியல் சக்கரம்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு அரசியல் சிக்கல் சூழ்நிலை நிலவியதில்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இப்பொது இம்மூவரும் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்களால் மலேசியாவின் அரசியல் களம் பெரும் குழப்பத்திற்கும் சலசலப்புகளுக்கும் உள்ளாகியிருக்கிறது.

இந்நேரத்தில் பலரும் எதிர்பார்த்த விதமாக பிரதமர் பொறுப்பில் இருந்து மகாதீர் விலக வேண்டும் என்றும், அன்வார் இப்ராஹிமை பிரதமராக வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன. அண்மைக்காலமாக மகாதீர் மொஹமத் எப்போது ஊடகவியலாளர்களைச் சந்தித்தாலும் அவர்கள் மறக்காமல், தவறாமல் எழுப்பக்கூடிய ஒரு கேள்வி, “அன்வார் இப்ராஹிம் எப்போது பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார்?” என்பதுதான்.

மலேசியாவில் (மகாதீர்) புதிய அரசாங்கம் அமைந்த பிறகு நடைபெற்ற ஐந்து இடைத்தேர்தல்களில் ஆளும் கூட்டணி படுதோல்வி அடைந்ததே செய்தியாளர்களின் இந்த கேள்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் மகாதீர் 1981 – 2003 வரை சுமார் 22 ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்தவர், மலேசிய அரசியல் மட்டும் இன்றி நாட்டின் பல வளர்ச்சி திட்டங்களில் மிக பெரிய பங்குவகித்தவர்.

இவ்வாறு பழுத்த அரசியல் அனுபவமும், அரசியல் ஞானமும் பெற்ற மகாதீர் ஏன் பதவி விலக வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மலேசிய அரசியலில் மகாதீர் அவர்களுக்கு எதிராக இவ்வளவு பிரச்சனை எழுந்துள்ள நிலையில் இந்தியாவின் பாமாயில் வர்த்தகம் அந்நாட்டு அரசியலில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாள் அதுமிகையல்ல.