‘மே 4 முதல் ‘கிட்டத்தட்ட அனைத்து’ பொருளாதாரத் துறைகளும் திறக்கப்படும்..?’ – மலேசிய பிரதமர்

Muhyiddin

கொரோனாவின் தாக்கம் மலேசியாவில் மெல்ல மெல்ல குறைந்த வருவதால், மலேசியாவில் பெரும்பாலான பொருளாதாரத் துறைகள் திங்கள்கிழமை (மே 4) முதல் சுகாதார நெறிமுறைகளுடன் திறக்கப்படும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் தனது தொழிலாளர் தின சிறப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் பெரிய அளவில் பொருளாதார முடக்கம் ஏற்பட்டது. வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. சுமார் 44 நாட்கள் கழித்து இன்று பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் மே 4ம் தேதி முதல் தளர்வுகள் இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார்.

இன்று, வெள்ளிக்கிழமை மே தினத்தன்று நேரடியாக ஒளிபரப்பப்பட்ட தனது உரையில், பிரதமர் பேசியபோது “சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையுடனும், உலக சுகாதார அமைப்பு (WHO) கோடிட்டுக் காட்டிய நெறிமுறையுடனும், அரசாங்கம் அதன் பொருளாதாரத் துறைகளை கவனமாக திறக்க முடிவு செய்துள்ளது”, என்று தெரிவித்துள்ளார்.

“கிட்டத்தட்ட அனைத்து பொருளாதாரத் துறைகளும் வணிக நடவடிக்கைகளும் மே 4 முதல் செயல்பட அனுமதிக்கப்படும், அதே சமயம் மக்கள் அதிகம் கூடும் நிலையில் உள்ள துறைகள் கண்டிப்பாக தொடர் பூட்டுதலில் இருக்கும் என்று” பிரதமர் தெரிவித்தார்.