தொடரும் சளிக்காய்ச்சல் – விடுமுறையில் மலேசிய பள்ளிகள்

Malaysian-Schools

உலகின் பல நாடுகளில் இந்த டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஒருவித குளுமையான வானிலையே  நிலவும், இந்த வானிலையால் சளிக்காய்ச்சல், குளிர்காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், தற்போது பினாங்கிலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் இது அதிகரித்து வர, அங்குள்ள பல பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதுமட்டும் இல்லாமல் சிகிச்சையை நாடி வரும் நோயாளிகளையும் நிராகரிக்க வேண்டிய நிலைமை அந்த பகுதிகளில் இருக்கும் மருத்துவ மனைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே இந்த நிலைமை அங்கு நீடித்து வருவதால் பல பள்ளிகள் இன்னும் மூடப்பட்ட உள்ளது. மேலும் நாட்டில் சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியின் இருப்பும் குறைந்து கொண்டே வருவதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த வாரத்தின் நிலவரப்படி பினாங்கில் குறைந்தது 53 பேர் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலாங்கூரில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளிடம் “அவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் குணமடைந்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏன் என்றால், வரும் அனைவரையும் பொது பிரிவு மருத்துவமனைகளில் அனுமதித்தால் அங்குள்ள மற்றவர்களுக்கும் காய்ச்சல் தொற்றிவிடும்,” என்று துணை சுகாதார அமைச்சர் லீ பூன் சாய் கூறியதாக மலேசிய ஊடகங்கள் கூறின. இந்நிலையில் தடுப்பூசி குறைவாக உள்ளதாக வரும் தகவல்கள் தவறு என்று, போதுமான சளிக்காய்ச்சல் மருந்து இருப்பு உள்ளதாக அவர் கூறினார்.