COVID – 19 : மலேசியாவில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் பூரண குணம் – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor hisham abdullah

கொரோனா அச்சம் காரணமாக உலகமே நிலைகுலைந்துள்ளது, மலேசியாவிலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்து உள்ளது. அன்றாட வருமானத்தை நம்பி வாழும் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதுவரை மலேசியாவில் இந்த கொரோனா பாதிப்பால் 45-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்த விஷயத்தில் எப்படி செயல்படுவது என்பது தெரியாமல் பல நாட்டு அரசாங்கங்கள் தவித்து வருகின்றன. இந்நிலையில் மலேஷியா மக்களையும் அரசையும் சற்று ஆறுதல்படுத்தும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மலேசிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா.

மலேசிய நாட்டில் தற்போது 3000-க்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சுமார் 25 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 4ம் தேதி ஒரே நாளில் நான்கு பேர் இறந்த நிலையில் தற்போது 850-க்கும் அதிகமானோர் இந்த நோயில் இருந்து விடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மலேஷியா மருத்துவர்களும் சுகாதார பணியாளர்களும் சிறந்த முறையில் தங்களது சேவையை செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். மக்களும் அரசுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் நிச்சயம் மலேஷியா விரைவில் மீண்டு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.