தெளிவான பாதையில் தான் மலேசியா செல்கிறது – மகாதீர்

malaysia

மகாதீர் முகம்மது, இவரது தலைமையிலான மலேசிய அரசு மிக சரியான பாதையில் பயணிப்பதாக கூறியுள்ளார். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் தற்போது திக்குத் தெரியாமல் தவித்து வருவதாக எழுந்துள்ள விமர்சனங்களை மறுத்துள்ளார் டாக்டர் மகாதீர். தற்போது தங்கள் அரசாங்கத்தின் கொள்கைகள் பெருமளவில் பயனளிக்கவில்லை என்றும் இன்னும் இரண்டு ஆண்டு காலத்திற்குள் சீராகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த அரசின் மீதான விமர்சனங்களுக்கு வலைப்பதிவு மூலம் நீண்ட விளக்கமளித்துள்ள டாக்டர் மகாதீர், “என்ன செய்ய வேண்டும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். சட்டங்களை விரைவில் உருவாக்கலாம் ஆனால் அதனை நடைமுறைப்படுத்த சில காலம் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆகவே குறைந்தது ஈராண்டுகள் அல்லது அதற்கு மேலும் ஆகலாம். ஆனால், அதற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன,” என்று அவர் கூறியுள்ளார்.

அரசு வழி தெரியாமல் அல்லாடுகிறது என்று குறிப்பிடுவோர், நடைமுறையில் உள்ள எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார், டிரில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கடன் சுமையைக் கொண்டுள்ளபோதும், நொடித்துப்போகாமல் நாட்டை தாங்கள் வழிநடத்துவதை விமர்சகர்கள் கவனிக்க வேண்டும் என்றார் அவர்.

இந்நிலையில், மலேசியாவின் இடைக்கால கல்வி அமைச்சராக பிரதமர் மகாதீரே செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 2ம் தேதி பதவியில் இருந்த கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் பதவி விலகினார். இதை தொடர்ந்து, அந்தப் பொறுப்பில் இன்னொருவர் நியமிக்கப்படும் வரை அதை பிரதமரே கவனித்துக்கொள்வார் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.