திருச்சி – 167 பயணிகளுடன் மலேசியா புறப்பட விமானத்தில் இயந்திர கோளறு

trichy airport

தினமும் திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு ஏர் ஏசியா நிறுவனம் விமான சேவையை அளித்து வருகின்றது. இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து கடந்த சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு ஏர் ஏசியா விமானம் ஒன்று திருச்சிக்கு வந்தடைந்தது. இந்த விமானம் மீண்டும் அடுத்த நாள் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும். வழக்கம் போல இந்த விமானத்தில் பயணம் செய்ய பலர் பதிவு செய்திருந்தனர்.

மறுநாள் சுமார் 167 பயணிகளுடன் திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட்ட அந்த விமானம் ஓடுதளத்தில் பயணித்தபோது இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளறு ஏற்பட்டதை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை மேலும் செலுத்தாமல் உடனடியாக நிறுத்தினார். விமானியின் சமயோசித நடவடிக்கையாலும், துரிதமான செயல்பாட்டினாலும் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிர்தப்பினர்.

விமானம் பழுதடைந்ததை அறிந்த விமான நிலைய பொறியாளர்கள் விரைந்து வந்து பழுதினை சரிபார்த்தனர். எனினும் என்ஜின் பகுதியில் ஆயில் கசிவு இருந்ததால் பழுதை சரிசெய்ய வெகுநேரம் ஆனது. சுமார் 20 மணி நேர ஆய்வுக்கு பின்னர் அந்த விமானத்தில் இருந்த பழுது சரிசெய்யபட்டது. அதன் பின் ஞாயிறு மாலை சுமார் 6 மணி 30 நிமிடங்களுக்கு அந்த விமானம் திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட்டது.