இனி ரோஹிங்கியா அகதிகளை ஏற்க முடியாது..!! – மலேசிய பிரதமர் திட்டவட்டம்.

Malaysia PM

இந்த மாதத்தின் தொடக்கத்தில் மலேசியாவிற்குள் உரிய ஆவணங்கள் இன்றி நுழைய முயன்ற சுமார் 250-க்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகளை தடுத்து நிறுத்தியது மலேசிய அரசு. மேலும் அவர்களை உடனடியாக திருப்பி அனுப்பவும் வழி செய்தது. இந்நிலையில் மலேசியாவில் இருந்து திரும்பசென்ற அகதிகளை பங்களாதேஷ் அரசு ஏற்றுக்கொள்ளாது, அவர்களை திரும்ப ஏற்க வங்கதேச அரசுக்கு எந்தக் கடமையும் இல்லை என அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் அனடோலு என்ற செய்தி நிறுவனத்திடம் அப்போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் வெளியிட்ட அந்த அறிக்கையில், ரோஹிங்கியா மக்கள் மியான்மர் குடிமக்கள் என்றும் அவர்கள் பங்களாதேஷியர்கள் அல்ல என்றும், அந்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்கள் அன்று மலேசிய அதிகாரிகள் சுமார் 269 ரோஹிங்கியா அகதிகளை கைது செய்ததோடு லங்காவி தீவில் இருந்து சேதமடைந்த படகுகளையும் ஒரு சடலத்தையும் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகளை இனி மலேஷியா ஏற்காது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் மலேசியா பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதீன் யாசின் அவர்கள். வளங்கள் குறைந்து வருவதாலும், மலேசியாவில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பரவும் கொரோனா காரணமாக அவர்களை ஏற்கும் சூழல் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.