கொரோனா-வால் குறைந்த சுற்றுலா – 70 % தள்ளுபடி அறிவித்த ‘லங்காவி’ ஹோட்டல்கள்

langkawi

சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலை நகர் வுஹானில் கடந்த ஆண்டின் இறுதியில் ஒரு இறைச்சி கடையில் இருந்து பரவ தொண்டாகியதாக கருதப்படுகிறது கொரோனா எனப்படும் வுஹான் வைரஸ் நோய். உலகம் முழுக்க சுமார் 20 நாடுகளில் இந்த நோய் தொற்று பரவி உள்ளது. இந்த நோய் பரவி வருவதால் சில நாடுகளில் சுற்றுலா துறை பாதிப்படைந்துள்ளது. பரவும் இந்த நோய் காரணமாக மக்கள் பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள தீவுக்கூட்டத்தில் ஒன்றான ‘லங்காவி’ கொரோனா நோய் தொற்றால் குறைந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க லங்காவியில் உள்ள ஹோட்டல்களில் 70 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக மலேசிய ஹோட்டல் அசோசியேஷனின் (எம்.ஏ.எச்) துணைத் தலைவர் ரஸ்மி ரஹ்மத்தின் கூறுகையில், MAH-உடன் இணைப்பில் உள்ள சுமார் 45 ஹோட்டல் ஆபரேட்டர்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் வீழ்ச்சியால், அதனை அதிகரிக்க இந்த தள்ளுபடியினை வழங்குவதாக தெரிவித்தார்.

இந்த தள்ளுபடி எத்தனை நாட்கள் செல்லுபடி ஆகும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் லங்காவிக்கு வருவது பாதுகாப்பானது என்றும், வழங்கப்படும் தள்ளுபடியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ரஸ்மி கூறினார்.