‘சுகாதார சான்றிதழ் வேண்டும்..?’ – மீண்டும் திறந்த கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தை

kuala lumpur wholesale market

கொரோனா பரவலால் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவி வரும் இந்த நிலையில், மலேசியாவில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது மே மாதம் 12ம் தேதி வரை மீண்டும் பொது நடமாட்டக்க கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்கள் பூட்டுதலுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது நாட்டின் மிகப்பெரிய சந்தையாக விளங்கும் கோலாலம்பூர் மொத்த காய்கறி வியாபர சந்தை.

இந்த நிலையத்தில் மொத்தம் 200-க்கும் அதிகமான கடைகள் இருந்தும், வெறும் 63 கடைகள் மட்டுமே அங்கு திறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று குறித்து சோதனை செய்து, நோயின் தாக்கம் இல்லை என்ற சுகாதார சான்றிதழ் இருப்பவர் மட்டுமே இந்த சந்தையில் கடையை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுகாதார சான்றிதழை ஒப்படைக்கும் நபர்களுக்கு மட்டுமே விற்பனைக்கான தற்காலிக பாஸ் வழங்கப்படும் என்று கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சில வியாபாரிகள் தங்களுக்கு பாஸ் கிடைத்தும் சக ஊழியர்கள் வேலைக்கு வரமுடியாத நிலையில் இருப்பதால், தங்கள் தொழிலை மேற்கொள்வதில் அதிக சிரமம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். சந்தைக்கு வரும் நபர்களும் உள்ளே இருப்பவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.