இடைக்கால பிரதமர் மகாதீர் – பல கட்சி தலைவர்களுடன் சந்திப்பு

malaysia pm

2018ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த மலேசியா பிரதமர் டாக்டர் மகாதீர் பின் முஹமது அண்மையில் தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய அரசருக்கு அனுப்பினார். மலேசிய அரசரும் அவரது கடிதத்தை ஏற்றுக்கொண்டு அடுத்த பிரதமர் பதவி ஏற்கும் வரை இடைக்கால பிரதமராக பணியாற்றும்படி மகாதீர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில் மலேசியாவின் இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது நேற்று காலை முதல் தனது அலுவலகத்தில் பல முக்கிய கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேசி வருவதாக பிரதமர் அலுவலக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், அம்னோ கட்சித் தலைவர் டாக்டர் அஹகது ஸாஹிட் ஹமிடி, பெர்சாத்து கட்சித் தலைவர் முகைதின் யாசின், உள்ளிட்ட பல கட்சி தலைவர்களை அவர் சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்று தற்காலிக பிரதமர் மகாதீர் இன்று வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டாலை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

டாக்டர் மகாதீர் பின் முஹமதை தவிர மற்ற 221 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேற்றும் இன்றும் தனிப்பட்ட முறையில் சந்தித்து வருகின்றார் மலேசிய மாமன்னர். யாருக்கு பெரும்பான்மை ஆதரவு அதிக அளவில் உள்ளது என்பதை அறியும் வண்ணமே இந்த முடிவினை மாமன்னர் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.