வெளிநாட்டு வேலை மோகத்தில் சரியான மற்றும் முறையான வழியை தேர்ந்தெடுக்காமல், உரிமம் இல்லாத அரசில் பதிவு செய்யப்படாத ஏஜெண்டுகள் மூலம் வெளிநாட்டில் வேளைக்கு சென்று அங்கு நிர்ணயிக்கப்பட்ட வேலை கிடைக்காமல் கொத்தடிமைகளாக வாழும் மக்களின் நிலை ஒரு தொடர் கதையாக இருக்கின்றது. இந்நிலையில் தற்போது மலேசியாவில் கொத்தடிமையாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் என்ற இளைஞர் மீட்கப்பட்டுள்ளார்.
பெரியஉஞ்சனை, இது தேவகோட்டையை அடுத்துள்ள ஒரு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் தான் ராமன் என்பவரின் மகன் விஸ்வநாதன். இவர் வெளிநாடு செல்ல கடந்த 2016ம் ஆண்டு முடிவு செய்து அதற்காக ஒரு வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் ஏஜெண்ட்டை அணுகியுள்ளார். அவரும் விஸ்வநாதனுக்கு மலேசியாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கிக்கொடுத்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதனை மலேசியா அழைத்து வந்த ஏஜெண்ட் தான் கூறியபடி வேலை தராமல், பல வேலைகளை கொடுத்து கொத்தடிமையாக நடித்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மனமுடைந்த விஸ்வநாதன், தன்னை மீண்டும் தாயகமான இந்தியாவிற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து விஸ்வநாதனை தாயகம் அழைத்துச்செல்ல சுமார் 20 லட்சம் பணம் தரவேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் விஸ்வநாதனின் தாயார் சிவபாக்கியத்திடம் இதுபற்றி கூறி ரூ.12 லட்சம் வரை பெற்றுக்கொண்டதாவும் கூறப்படுகிறது.
நிலைமை கைமீறிப்போகவே, தனது மகனை மீட்டு தரும்படி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். விரைந்து செயல்பட்ட கலெக்டர் ஜெயகாந்தன் அரசுக்கும் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்து விஸ்வநாதனை இந்தியாவிற்கு திரும்ப அழைத்துவர நடவடிக்கை எடுத்தார்.
அதன்பேரில் மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விஸ்வநாதனை மீட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாயகம் திரும்பிய விஸ்வநாத்தை நேரில் அழைத்து சந்தித்த கலெக்டர் அவருக்குவாகனம் வாங்க வங்கி கடனுதவி பெற்று தரப்படும் என்றும் தெரிவித்தார்.
முறையான அங்கீகாரம் இல்லாத ஏஜெண்டுகள் மூலம் வெளிநாட்டிற்கு வேளைக்கு செல்பவர்களுக்கு விஸ்வநாதன் ஒரு பாடம் என்றும் இனியாவது இளைஞர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.