வெளிநாட்டு தொழிலார்களை குறைசொல்வது தவறு..? – மலேசிய சுகாதார அமைச்சகம்

Foreign Workers

மலேசிய அரசு இந்த கொரோனா காலத்தில் பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. அதே சமயம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் தற்போது தளர்வு பெற்று வருகின்றன. இந்நிலையில் மலேசியாவில் வேலை செய்யும் அந்நியநாடுத் தொழிலாளர்களுக்கு கொரோனா குறித்த பரிசோதனை செய்துகொள்ள மானியம் வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகி உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு அந்நியநாடுத் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர்கள் அனைவருக்கும் கோவிட் 19 குறித்த சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர்களை வேளையில் அமர்த்தியுள்ள நிறுவனங்களுக்கு இது பெரிய பளுவாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு பரிசோதனை செய்துகொள்ள சுமார் 150 ரிங்கட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு பணியாளர்கள் மூலம் தான் தொற்று பரவுகிறது என்று பலர் குறைகூறுவதை நிறுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்து பணிபுரிபவர்களுக்கு அவர்களுடைய முதலாளிகள் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருப்பதாக மலேசியா இன்று செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.